மக்களுக்கான பணியைக் கவனிப்போம்.! நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம்.! - முதல்வர் ஸ்டாலின். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 செப்டம்பர், 2022

மக்களுக்கான பணியைக் கவனிப்போம்.! நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம்.! - முதல்வர் ஸ்டாலின்.


இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் இன்றைக்கு நம்முடைய ஆட்சிமுறை மிகச் சிறப்பான வகையில் அமைந்திருப்பதை ஏடுகள் பலவும் பாராட்டுகின்றன. ஊடகங்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.


பத்து ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆட்சிப் பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் நாள்தோறும் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கிறது.


இந்த நிலையில் நம்முடைய கழகத்தின் நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பேசக்கூடிய செய்திகளைத் திரித்து, மறைத்து, வெட்டி - ஓட்டி, மோசடி செய்து வெளியிடுவதை, நச்சு சக்திகள் ஒரு தொடர் வேலையாகவே மேற்கொண்டு வருகின்றன.


எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன.


பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வதுபோல அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால் வேகமாகச் சுழல்கிறார்கள், நாம் கையில் ஆட்சி மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.


சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.


எனவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். பொறுப்புடன் நடப்போம். நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவோம். அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.


அவை பற்றி நாம் பேசுவதைவிட, பயன்பெற்ற மக்கள் பேசுவார்கள். அவர்களே இந்த நச்சு சக்திகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். அந்தப் பொறுப்பை உணர்ந்து நம் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/