கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த ரயில்வே உயர் அதிகாரியின் சோதனை ரயில் இன்ஜினை, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலைய மேம்பாட்டிற்கான கோரிக்கை மனுவை அதிகாரி வாங்க மறுத்ததே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாகும்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பியூட்லின் ஜீவா தலைமையில், இரணியல் ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடை அமைப்பது உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரணியல் ரயில் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு சோதனை ரயில் இன்ஜினில் வந்திருந்தார்.
அவரிடம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது கோரிக்கை மனுவை வழங்கச் சென்றனர்.
ஆனால், அந்த அதிகாரி மனுவை வாங்க மறுத்ததோடு, மனு அளிக்க வந்தவர்களைச் சந்திக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரியின் இந்தச் செயலால் அதிருப்தியடைந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் ஒன்றிணைந்து, அதிகாரி வந்த சோதனை ரயில் இன்ஜின் முன்பு அமர்ந்து அதனைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குருந்தன்கோடு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீவேணு முன்னிலை வகித்த இந்தப் போராட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் மதியழகன், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், திங்கள்நகர் கவுன்சிலர் ஜேக்கப், தக்கலை வட்டார தலைவர் திஜீ, வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, இறங்கி வந்த ரயில்வே அதிகாரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் அழைத்துச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அவர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரி, இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னரே சிறைபிடிக்கப்பட்ட ரயில் இன்ஜின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக