திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 3 கடைகள் மற்றும் ஒரு கோவிலின் உண்டியல் உடைத்து திருட்டு நடந்ததுடன், மேலும் 2 கடைகளில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், நகரில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தாராபுரம் சகுனி பாளையம் சாலையில் உள்ள சம்பத் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ரங்கநாதன் (52). இவரது கடையின் பூட்டை உடைத்து அதிகாலை நேரத்தில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.13,000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
அதே பகுதியில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான இ-சேவை மையத்தின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள நேரு நகர், மேற்கு பஜனைமடத் தெருவில் மளிகை கடை நடத்தி வரும் சிவதர்மராஜன் (60) என்பவரது கடையின் பூட்டை உடைத்து, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.30,000 ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதற்குப் பிறகு அருகில் இருந்த சித்தி விநாயகர் கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.6,000 காணிக்கை பணத்தையும் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தாராபுரம் – கரூர் சாலையில் டி.காளிபாளையம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள அடுத்தடுத்த இரண்டு கடைகளின் பூட்டுகளையும் உடைத்து கதவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் கடைகளின் எதிரே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கவனித்த மர்ம நபர்கள், திருடும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
ஒரே நாளில் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்களில், சுமார் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் உள்ளிட்ட பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து, மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. எனவே நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக