தாராபுரம் வளர்ச்சிக்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு 14 சங்கங்கள் பாராட்டு விழா!. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

தாராபுரம் வளர்ச்சிக்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு 14 சங்கங்கள் பாராட்டு விழா!.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி தனது பதவிக்காலத்தில் தொகுதி வளர்ச்சிக்காக மேற்கொண்ட பல்வேறு பணிகளை பாராட்டும் வகையில் தாராபுரத்தில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.


தாராபுரம் நகரில் செயல்பட்டு வரும் அரிமா சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், நகை மற்றும் ஜவுளி வியாபாரிகள் சங்கம், வர்த்தகர் சங்கம், தொழில் முனைவோர் சங்கங்கள் உள்ளிட்ட மொத்தம் 14 பொதுநல அமைப்புகள் இணைந்து இந்த பாராட்டு விழாவை தாராபுரம் தமிழ் கலை மன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் செய்த வளர்ச்சி பணிகளை பல்வேறு அமைப்புகள் பாராட்டின.


விழாவில் பேசிய நிர்வாகிகள் கூறியதாவது: தாராபுரம் தொகுதியில் பல ஆண்டுகளாக அரசு கலைக்கல்லூரி இல்லாததால் ஏராளமான மாணவ-மாணவிகள் உயர்கல்விக்காக அண்டை மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாராபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


மேலும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட மருத்துவமனை உருவாக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் வகையில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


அதோடு, அமராவதி ஆற்றின் குறுக்கே தொகுதியின் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டு கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விரைவாக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதி கிடைத்துள்ளது.


மேலும், தொகுதி முழுவதும் தரமான தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பழமையான தாராபுரம் தொகுதியை புதிய வசதிகளுடன் கூடிய வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களின் பங்கு மறக்க முடியாதது என்றும் நிகழ்ச்சியில் பேசியவர்கள் தெரிவித்தனர்.


இந்த வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் அமைச்சர் கயல்விழியின் கணவர் வழக்கறிஞர் செல்வராஜ் மற்றும் திமுக நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கும் பொதுநல அமைப்புகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், டாக்டர் தங்கராசு, பிஎஸ்என் அறக்கட்டளை சார்பில் சுஜாதா, தனியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் விவேகம் சுப்பிரமணியம், வர்த்தகர் சங்க தலைவர் ஞானசேகரன், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் சாரதாஸ் சண்முகவேல், தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேதாஜி பாலச்சந்தர், இரும்பு மற்றும் பெயிண்ட் வியாபாரிகள் சங்கம், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 14 பொதுநல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மேலும் தாராபுரம் நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவித்து அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad