தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR – Special Intensive Revision) நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு பட்டியலை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. SIR பணிகள் தொடங்குவதற்கு முன்பு, மாநிலத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியான வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது குறிப்பிடப்பட்ட முகவரியில் வசிக்காதவர்கள், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்திருந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக Election Commission of India தெரிவித்துள்ளது. மேலும், பிற மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களாக இருப்பது, காணப்படாதது, டிசம்பர் 14க்குள் SIR படிவத்தை சமர்ப்பிக்காதது, அல்லது வாக்காளராக பதிவு செய்ய விரும்பாதது போன்ற காரணங்களாலும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரைவு பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்ய, வாக்குச்சாவடி வாரியான அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் பிரதிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்திலும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் https://voters.eci.gov.in/download-eroll இணையதளத்தில் மாவட்டம் மற்றும் தொகுதியை தேர்வு செய்து, தங்களது வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.
.
பலருக்கு வாக்குச்சாவடி மாறியுள்ளதால், முதலில் தங்களது வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக Voter Helpline App-ல் EPIC எண்ணை உள்ளிட்டு, வாக்குச்சாவடி எண் மற்றும் வரிசை எண்ணை தெரிந்து கொண்டு, அதற்குரிய பட்டியலில் பெயரைத் தேடலாம். இணையத்தில் சிக்கல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரை (BLO) தொடர்புகொள்ளலாம்.
மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலும், அதற்கான காரணங்களும், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அறிவிப்புப் பலகைகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வரைவு பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்காதவர்கள் Form–6 மூலம் புதிதாக வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு Form–8 பயன்படுத்தலாம். பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தில் ஆட்சேபனை இருப்பின், Form–7 மூலம் புகார் அளிக்கலாம்.
டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் ஆட்சேபனைகள் (Claims & Objections) பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த தேர்தலில் வாக்குரிமை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக