பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரி ஒருவர், தான் வாங்கிய பழைய துணிகளில் கிடைத்த 5 சவரன் தங்க நெக்லஸை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் காதரின் மகன் ஜானி, பழைய துணிகளை வீடு வீடாகச் சென்று வாங்கி, அவற்றை விற்பனை செய்து தனது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேந்தநாடு, உடையானந்தல், மாரனோடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளுக்குச் சென்று பழைய துணிகளை வாங்கியுள்ளார். பின்னர், அவற்றுக்கான பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிட்டு, வாங்கிய துணிகளைத் தனது வீட்டிற்குக் கொண்டு சென்று அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பழைய துணிகளுக்கு இடையில் 5 சவரன் எடையுள்ள தங்க நெக்லஸ் ஒன்று இருப்பதைக் கண்டு ஜானி அதிர்ச்சியடைந்தார். அந்த நகை யாருக்குச் சொந்தமானது என்பது தெரியாத நிலையிலும், அதனைத் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணத்துடன் செயல்பட்டார்.
அதன்படி, இன்று திருநாவலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற ஜானி, அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜ்குமாரிடம் 5 சவரன் தங்க நெக்லஸை ஒப்படைத்தார்.
பொருளாதார ரீதியாக உழைத்து வாழும் ஒரு சாதாரண தொழிலாளி, தனக்குக் கிடைத்த மதிப்புமிக்க தங்க நகையை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக