தூய்மை பாரதம் திட்டத்தின், 'தூய்மையே சேவை' இயக்கத்தின்கீழ் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்ட பாண்டி மெரினா கடற்கரை தூய்மை பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தூய்மைப்பணியைத் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் ஆ. அன்பழகன், உள்ளாட்சித் துறை செயலர் விக்ராந்த் ராஜா, இயக்குநர் ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் தூய்மைப் பணியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் முன்மொழிய தூய்மையே சேவை உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். மேலும், தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் அப் பகுதியில் விளக்குக் கம்பங்களைப் பார்வையிட்டார்.
இதுபோல,நெட்டப்பாக்கம் தொகுதியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக தூய்மைப் பணியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பெ. ராஜவேலு தொடங்கி வைத்தார். அப்போது நெட்டப்பக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகம்:
இதே போன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஜிப்மர் சார்பில் வியாழக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. இதை புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் ஆ.அன்பழகன் தொடங்கி வைத்தார்.ஜிப்மர் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 150 தன்னார்வலர்கள் இப் பணியில் பங்கேற்றனர். புதுச்சேரி ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையை ஒட்டியுள்ள முழுப் பகுதியையும் சுத்தம் செய்தனர்.
ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் சாகா வினோத் குமார், துணை இயக்குநர் (நிர்வாகம்) கேசவன், டாக்டர் ரவி குமார் சிட்டோரியா, சுகாதார அலுவலர் மற்றும் தூய்மைப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் பிரார்த்தனா, புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக