கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 100 பெண் குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துபெட்டகங்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 நவம்பர், 2026

கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 100 பெண் குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துபெட்டகங்கள் வழங்கப்பட்டது.


கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சமூகநலன் மற்றும் மகளிர் பெண் உரிமைத்துறையின் சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் 100 பெண் குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க மற்றும் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண் பெண் சமத்துவத்தை உறுதி செய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும்.

நமது இந்திய நாட்டில் பெண் குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் "தேசிய பெண் குழந்தைகள் தினம்” துவக்கி வைக்கப்பட்டது.

2026-2027ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுக்கவும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்தவும், பதின்மவயதில் கருவுறுதலை எதிர்க்கவும், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாக சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதன் ஒரு பகுதியாக, புதிதாகப் பிறந்த 100 பெண் குழந்தைகள் கௌரவிக்கப்பட்டு, அவர்களின் தாய்மார்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், குழந்தை பராமரிப்புப் பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பிறந்த முதல் 1,000 நாட்களில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் சிறப்பான பராமரிப்பைத் தாய்மார்கள் வழங்க வேண்டும். இன்றைய சமூகத்தில் பெண்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதனையாளர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். எனவே. தாய்மார்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியுடன் உயர்கல்வியையும் தொடர்ந்து பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் உயர்கல்வியை முடித்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஊக்கமளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (பொ) எம்.விஜய் ஆனந்த் தம்மையா, மாவட்ட சமூகநல அலுவலர் கு.ராஜம்மாள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

D.தனுஷ்
கடலூர் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad