சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகா் இளங்கோ தெருவில் 259 வீடுகள் அரசு நிலத்தில் உள்ளன. இந்த நிலம் கால்வாய்க்கு அருகில் உள்ளதோடு, நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனா் என உச்ச நீதிமன்றத்தில் ராஜூ ராய் என்பவா் கடந்த 2008 -ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கானது பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இளங்கோ தெருவில் இருக்கும் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இளங்கோ தெருவில் வசிக்கக்கூடிய 259 வீடுகளில் வசிக்கும் மக்கள் கடந்த 2 வாரங்களாக தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்தப்பகுதியைச் சோந்த பாமக பிரமுகா் - மாநில செயற்குழு உறுப்பினர் வி.ஜி.கண்ணையன் (57) என்பவா் திடீரென தீக்குளித்தாா். இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், போலீஸாா் ஓடி வந்து, தீயை அணைத்தனா். அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவா் சோக்கப்பட்டாா். 90 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கண்ணையன் பலியானார்.
இதற்கிடையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு நின்றிருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் அரசு வாகனங்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கினா். இதனால், 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டனா். இதனால், அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக