அமெரிக்காவுடன் பயிற்சி என்ற பெயரில் சதி வேலைகளா? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 அக்டோபர், 2022

அமெரிக்காவுடன் பயிற்சி என்ற பெயரில் சதி வேலைகளா?


வாஷிங்டன், அக்.21- ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலகங்களுக்கு தலைமையேற்றுள்ள ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவுடன் இணைந்து நடத்தும் பயிற்சிகளில் பங்கேற்றவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 

2008-ஆம் ஆண்டில் இருந்து ஐந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்பது ராணுவக் கலகங்களுக்கு அமெரிக்காவால் பயிற்சி தரப்பட்ட ராணுவ அதிகாரிகள் தான் காரணமாக இருந்திருக்கிறார்கள். இவற்றில் பர்கினோ ஃபாசோ, கினியா மற்றும் மாலி ஆகிய நாடுகளில் நடந்த எட்டு கலகங்கள் வெற்றி பெற்று ராணுவத்தின் வசம் அதிகாரம் சென்றது. 

2014 ஆம் ஆண்டில் காம்பியாவில் நடத்தப்பட்ட கலகம் மட்டும் தோல்வியில் நிறைவு பெற்றது. ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்கப் படைகளின் தலைமையகமான “ஆப்பிரிகாம்” இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது.

2015ஆம் ஆண்டில் இருந்து ஐந்து கலகங்கள் ராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் கலகங்களில் ஈடுபட்ட பல ராணுவ அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்தால் பயிற்சி தரப்பட்டவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக “பிளின்ட்லாக்” என்ற பயிற்சியை அனைவரும் சுட்டிக்காட்டுகிறார்கள். 

ஆப்பிரிக்கக் கண்டத்தையே அதிர்வுறச் செய்யவே இந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

பர்கினோ ஃபாசோவின் கில்பர்ட் டியன்டெரே மற்றும் பால் ஹென்றி, கினியாவின் மமடி டும்புவா, மாலியின் அஸ்சிமி கோய்டா உள்ளிட்டோர் அவரவர் நாடுகளில் நடத்தப்பட்ட கலகங்களில் முக்கியப் பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் அனைவரும் அமெரிக்காவுடன் இணைந்து நடத்தப்பட்ட பயிற்சிகளில் பங்கேற்றிருந்தவர்களாவர். 

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டில் ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரியான டான் போல்டக், “பர்கினோ ஃபாசோ, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, மாலி, மவுரிடானியா, நைஜர், சோமாலியா மற்றும் டுனீசியா ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகள் சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன” என்கிறார். 

அமெரிக்காவின் ஆப்பிரிக்க சிறப்பு நடவடிக்கைகள் தலைமையகத்தில் முக்கியமான பொறுப்பில் இவர் பணியாற்றி வந்தார்.

கமாண்டோக்கள்

அமெரிக்காவின் அதிரடிப் படை வீரர்களில் 14 விழுக்காட்டினர் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளுக்கு 2021 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டனர். 

இவர்கள் சென்ற நாடுகளில் சிலவற்றில் ராணுவக் கலகம் நடந்து ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளன. 2005 ஆம் ஆண்டில் இருந்து ஏராளமான பயிற்சிகள் அமெரிக்காவின் தரப்பில் இருந்து தரப்பட்டுள்ளன. 

தங்கள் பயிற்சிகள் நாடுகளில் குழப்பங்களை விளைவிக்கும் நோக்கத்தில் தரப்படவில்லை என்று அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரான ஜேமி சாண்ட்ஸ் கூறியுள்ளார். 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ராணுவம் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்காவில் பயிற்சிகள் தரப்படுகின்றன. 

தென் அமெரிக்காவில் தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளின் ஆட்சியாளர்கள் கவிழ்க்கப்படுவதும் அமெரிக்க விசுவாசிகளாக மாறிய உள்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியோடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/