75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊர்திகள் மற்றும் மாணவர்களின் மன நலம் காக்கும் ‘மனம்’ திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு மன நலக் காப்பகத்தை ரூ.40 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயர்வு மையத்திற்காக கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.12.2022) சென்னை கீழ்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 22.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊர்திகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ‘மனநல நல் ஆதரவு‘ மன்றங்கள் அமைத்து, மாணவர்களின் மன நலம் காக்கும் ‘மனம்’ திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

மேலும், சென்னை அரசு மன நலக் காப்பகத்தை தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் ஒப்புயர்வு மையத்தினை முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி கட்டப்படவுள்ள கட்டடத்திற்கான முப்பரிமான வரைபடத்தை வெளியிட்டார். அவசர மருத்துவச் சிகிச்சை, தீ விபத்து, சாலை விபத்து போன்ற காலங்களில் பொதுமக்கள் ‘108‘ என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற ஏதுவாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் 15.9.2008 அன்று மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது.
இச்சேவையில் தற்போது 1,353 அவசரகால ஊர்திகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 7.5.2021 முதல் நவம்பர் 2022 வரை 9.10 இலட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட 32.05 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு 208 அவசரகால ஊர்திகளும், 130 மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்று 22.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பொதுவாக மனிதர்கள் உடல்நலத்தை பேணுவதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், மனநலத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. உடலும் மனமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமான ஆக்கப்பூர்வமான வாழ்வை நாம் வாழ முடியும். இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக்
இந்த மன நல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்களின் நலவாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், மாணவர்களின் கலைத்திறன், கற்பனைத் திறன் உள்ளிட்ட அனைத்து வகை தனித் திறன்களை கண்டறிந்து, தனித் திறன் மேம்பாட்டிற்கான வழி வகைகள் உருவாக்கப்படும்.
உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘மனம்’ அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் ‘மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்)” மற்றும் “நட்புடன் உங்களோடு – மனநல சேவை (14416)” ஆகியவற்றை தொடங்கி வைத்தார். பின்னர், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தற்காக காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மன நல சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பாமரிப்பு மையத்தை முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
2022-23-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, மனநலம் மற்றும் நரம்புசார் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான மாநில அளவிலான தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற ஒப்புயர்வு மையம், சென்னை அரசு மனநல மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து வகையான மன நல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மன நலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மன நல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.
குழந்தைகளுக்கான மன நலப் பிரிவு மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மன நல சிகிச்சை பெறும் வகையில் தனிப் பிரிவு செயல்படும். ஆட்டிசம் சிகிச்சை, முதியோர் நலன், போதை மீட்பு சிகிச்சை, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு மன நல சிகிச்சை ஆகிய சேவைகளும் இந்நிறுவனத்தில் செயல்படுத்தப்படும். மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மன நல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும்.
இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மன நல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மன நலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனம், உயர் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சிறப்பிடமாக இருக்கும். மன நலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாட்டிற்கான ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் – சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம், மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் விருதினை தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மேலும், சுகமான மகப்பேறு நிலையங்களை (சுமன்) தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் விருதினை மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள்.
நிறைவாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல நிலைய பயன்பாட்டிற்காக மூன்று மின்சார மிதிவண்டிகளை ABS Motors நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். ரமேஷ் சுப்பிரமணியன் அவர்கள் அரசு மனநல நிலைய இயக்குநர் (பொறுப்பு) அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. அ. வெற்றியழகன், திரு. தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். உமா, இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் வி.பி. ஹரி சுந்தரி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக