மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு| தொடங்கியது; 32 தீர்மானங்கள் நிறைவேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு| தொடங்கியது; 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

ஞாயிறு காலை 8.40 மணி அளவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கழக கொடி ஏற்றி வைக்க மாநாடு தொடங்கியது. கொடி ஏற்றிய போது, ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் மாநாடு திடல் முழுவதும் தூவப்பட்டது. கொடி ஏற்றிய பிறகு, கழகப் பாசறை, அம்மா பேரவை மற்றும் தொண்டரணி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


முன்னதாக, காலை 6.00 மணிக்கே மதுரை மாவட்ட அதிமுக செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனிக்கத் துவங்கினர். தொண்டர்களும் அணி அணியாக வரத் துவங்கினர். கொடி ஏற்றிய எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள், இன்றைய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.


பின்னர் அருகில் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதில் அதிமுக 50 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் புகைப்படங்களாக வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. 1972 முதல் இப்போது வரை 50 ஆண்டு கால அதிமுக வரலாற்று புகைப்படங்களும், அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த திட்டங்களும் plaster of Paris கொண்டு களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு காட்சி படுத்தப் பட்டுள்ளன.


கண்காட்சியை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி, திறந்த வேனில் மாநாட்டுத் திடலை சுற்றி வந்தார். பின் தங்கி இருக்கும் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டுத் திடலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு, தொண்டர்கள் நிறைந்து காணப்படுகிறது. வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் அதிகாலையிலேயே வந்து சேர்ந்த நிலையில், அருகில் உள்ள மாவட்டத்தினர் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை மாநாட்டிற்கு வேன், கார் மற்றும் பேருந்து மூலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.


காலையில் இசை நிகழ்ச்சி, கவியரங்கம் மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இசைக் கலைஞர் செந்தில் & ராஜலட்சுமி குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. திடலில் அமர நாற்காலி கிடைக்காதவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க மாநாட்டுத் திடலுக்கு அருகேயே மிக நீண்ட அஸ்பெஸ்டாஸ் கூடாரங்கள் அமைக்கப்பட்டு LED திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


உணவுக் கூடாரங்கள் மூன்றில் காலை 9.30 மணி முதல் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மொபைல் டாய்லெட் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மாலை 4.00 மணி முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பேசிய பிறகு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற இருக்கிறார்.


மாலையில் அதிமுக மாநாட்டு திடல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களால் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தொண்டர்களின் பலத்த கரகோஷம் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், அதிமுக தொண்டாகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.
  2. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடியார்க்கு வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டுகளும்.
  3. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடியார் திகழ்கிறார். அம்மா அவர்களின் அரசியல் வாரிசு என நல்லாட்சியைத் தந்தவர். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்த பொதுச் செயலாளர்.
  4. அதிமுவிற்கு இரண்டு கோடிகளுக்கு மேல் உறுப்பினர் சேர்க்கைக்காக அதிமுகவின் மாவட்ட / மாநில / பிற மாநில நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டும் நன்றியும்.
  5. இந்திய திருநாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.
  6. திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
  7. தமிழக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்விக்காக மத்திய அரசை வலியுறுத்தல்.
  8. தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
  9. புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்
  10. மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம்.
  11. மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழக அரசுக்கு கண்டனம்.
  12. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம். இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய விடியா அரசுக்கு கண்டனம்.
  13. விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தமிழக அரசுக்கு கண்டனம்.
  14. மேகதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழக அரசை கண்டித்து.
  15. கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்து.
  16. நினைத்ததை முடிப்பவன் நான் புரட்சித் தலைவர் பாடினார். அதன்படி நினைத்ததை முடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
  17. தமிழகத்தில்தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  18. நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  19. உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  20. காவிரி குண்டாறு நதிகளின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து தீர்மானம்.
  21. கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
  22. பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  23. கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  24. மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் அங்கு அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தல்
  25. கழக நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்
  26. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  27. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  28. அம்மா ஜெயலலிதாவிற்கு சட்ட சபையில் இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் மு.க. ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.
  29. கட்சியிலிருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமிக்கு பாராட்டு.
  30. மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  31. 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை.
  32. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை தமிழக முதல்வராக்க சபதம் ஏற்போம் என தீர்மானம்.

என மொத்தம் 32 தீர்மானங்கள் அதிமுக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad