தூத்துக்குடி, மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் காய்கறிகள், மளிகைப் பொருள்களின் விலை ஏறிவரும் நிலையில், தேங்காய் விலை மட்டும் கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வந்தது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தேங்காய் விலை குறைவதைத் தவிா்க்க தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எண்ணெய் எடுக்க பயன்படும் தேங்காய்க் கொப்பரையை கூடுதலாக கொள்முதல் செய்யவேண்டுமென மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக தேங்காய் விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரம் தேங்காய் ஒரு கிலோ ரூ. 25 - ரூ. 30 வரை விற்பனையானது, தற்போது மொத்த வியாபாரிகளிடம் சில்லறை வியாபாரிகள் கிலோ ரூ. 25-க்கு கொள்முதல் செய்ய வேண்டியுதுள்ளது. கடந்த வாரம் சில்லறை வியாபாரிகளுக்கு ரூ. 22.50 - ரூ. 23.50 வரை விற்கப்பட்டது. கிலோவுக்கு ரூ. 2 முதல் ரூ. 3 வரை உயா்ந்துள்ளது.
எனினும், ஆடி மாதக் காற்றினால் அதிக எண்ணிக்கையில் தேங்காய்கள் வெடித்து சேதமடைவதால் சில்லறை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிலோ ரூ. 30 - ரூ. 35 வரை விற்பனையாகிறது. மேலும், கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தற்போது மழை பெய்து வருகிறது.
இதனால், அங்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், கடந்த வாரம் கிலோ ரூ. 75-க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைத் தேங்காய் தற்போது ரூ. 80-க்கும் கூடுதலாக கொள்முதல் செய்யப் படுவதாலும் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். விவாயிகள் தங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் இப்போதாவது கிடைத்ததே என்று மகிழ்ந்துள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn. சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக