திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியரின் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியரின் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகர் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி திருச்செந்தூர் அமலிநகரில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மீனவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் உறுதி அளித்ததை தொடர்ந்து அமலிநகர் ஊர் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.58.00 கோடியில் மதிப்பீடு தயார் செய்து துறையின் பரிந்துரையுடன் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அரசின் நிதிநிலை மானிய கூட்டத்தொடரில் சட்டசபையில் 13.04.2022 அன்று இத்திட்டமானது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் நீதிமன்ற உத்தரவின்படி கடல்பகுதியில் கடினமான வடிவிலான (Hard Structures) எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது எனவும், மேலும் கடற்கரை ஒழுங்குமுறையாற்று வரைபடம் (Shore Management Plan) தமிழ்நாடு முழுமைக்குமான கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி தயார் செய்து அதன் பேரில் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஒழுங்குமுறையாற்று வரைபடம் (Shote Management Plan) பணி நிறைவுற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் தங்களது ஊருக்கு தூண்டில் வளைவினை ஏற்படுத்தி தர வலியுறுத்தி மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் கடந்த 07.08.2023 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் ஊர் நிர்வாகத்தினருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்த 08.08.2023 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நேரிலும், 15.08.2023 நாளில் பத்திரிக்கை வாயிலாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், இது குறித்து 17.08.2023 அன்று அமலிநகர் மீனவ கிராம ஊர் நிர்வாகிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் அனைவருடனும் கலந்து பேசி தூண்டில் வளைவு அமைப்பதற்கு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்திடவும், அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்று 18.08.2023 அமலிநகர் ஊர்மக்கள் சார்பில் சுமார் 70 மீனவர் மற்றும் மீனவ மகளிர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் மற்றும் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடத்தப்பட்ட சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் ஊர்மக்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டபின், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அமலிநகர் மற்றும் ஜீவா நகர் மீனவ கிராமத்திற்கு முறையே 58 கோடி மற்றும் 25 கோடி மதிப்பில் தூண்டில் பாலம் அமைப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியினை பெற்று விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் உறுதியினை ஏற்று அமலி நகர் ஊர் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டு திங்கள்கிழமை முதல் தொழிலுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக கூறினர்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/