கல்லூரி மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் மென்திறன்கள் (Soft Skills). - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 ஜனவரி, 2024

கல்லூரி மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் மென்திறன்கள் (Soft Skills).


மாணவர்கள் வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் முறையாக இருந்தால், கிராமப்புற மாணவர்களும் சரித்திரம் படைக்க முடியும். கல்லூரி மாணவர்கள் பட்டம் மற்றும் சான்றுகளும் இருந்தாலும், அதனுடன் மென்திறமை ( Soft Skills) சேர்ந்திருக்கும் போது தான் ஒரு சக்தி வாய்ந்த பணித் திறன் கிடைக்கும். இந்த மென்திறமை கல்லூரி மாணவர்களிடம் இருந்தால், அந்த மென்திறமைக்கு அதிக தேவை உள்ளது. நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்யும் பொழுது அந்த வேலைக்கான விண்ணப்பத்தில் மாணவர்கள் கல்லூரியில் இருந்து பெற்ற பட்டம் மற்றும் சான்றிதழ்களுடன், உங்களின் மென்திறமை பற்றி குறிப்பிட்டிருந்தால் கடும் போட்டிகளுக்கிடையே நீங்கள் வேலைவாய்ப்பை பெற முடியும்.

மேலும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் முறையான பட்டமும், அதிக விழுக்காடும், சான்றிதழ்கள் இருந்தும் மென்திறமை பற்றி விழிப்புணர்வு இல்லையென்றால், அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது பெரிதும் சவாலாக உள்ளது. எனவே கல்லூரி மாணவர்கள் மென்திறனை பற்றி நன்கு அறிந்து கொண்டால், வேலை வாய்ப்பு எளிதாக கிடைத்து விடும். உலக நாடுகளின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள், மென்திறனை அறிந்த மாணவர்களே வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.


மென்திறமை என்றால் என்ன:

மென்திறமை என்பது ஒரு மனிதனிடம் உள்ள தனிப்பட்ட பழக்க வழக்க அடிப்படையிலான திறமையாகும். சுயமாக வளர்த்துக் கொள்ளும் திறமையாகும். நல்ல கருத்துகளை வழங்குதல், பெறுதல், பிறருக்கு ஒத்துழைப்பு தருதல், நேரத்தை நிர்வகிப்பதற்கான திறன் போன்றவை மென் திறமைகளுக்கான எடுத்துக் காட்டுகளாகும். இந்த திறமையுள்ளவர்கள் அனைத்து வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள்.


மேலும் கல்லூரி மாணவர்கள் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது மற்றும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது இந்த மென்திறமைக்கான வெற்றிப் படிகளை கடைப்பிடித்தால் எளிதாக வேலை வாய்ப்பை பெற முடியும்.


மென்திறமைக்கான அடிப்படை கூறுகள்:

  1. தகவல் தொடர்பு திறமை
  2. அமைப்பாற்றல்
  3. குழுப் பணித்திறன்
  4. நேரம் மேலாண்மை
  5. முடிவு எடுக்கும் திறன்
  6. ஆளுமைத்திறன்
  7. படைப்பாற்றல்
  8. உள் நிர்வாகத் தொடர்பு
  9. காலத்திற்கேற்ப மாறும் தன்மை
  10. நட்புணர்வுடன் கூடிய ஆளுமைத் திறன்


1. தகவல் தொடர்பு திறமை

தகவல் தொடர்பு திறமை என்பது தெளிவாக பேசுதல், கூர்ந்து கவனித்தல், கவனத்துடன் செயல்படுதல், சிறப்பான பணியளிப்பு, எழுத்துத் திறன் ஆகிய தகவல் தொடர்பு சார்ந்த திறன்கள் உடையவர்கள். அடுத்து தொழில் நுட்ப கல்வி அறிவு மற்றும் புதிய தொழில் நுட்பம் குறித்த கருத்துக்களை கூட்டாளிகளுடனும், வாடிக்கையாளர்களுடனும், சக பணியாளர்களுடனும் பகிர்ந்து கொள்பவர்கள் மென்திறமையுடையவர்கள் என அறியப்படுகின்றனர். ஒருவர் சரியான வார்த்தைகளைக் கொண்டு சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும்.


2. அமைப்பாற்றல்

திட்டமிடுதல், திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல், எடுத்துக் கொண்ட வேலைகளை பொதுவாக நேரத்தில் முடித்துக் கொடுக்கும் திறன் ஆகியவை சிறந்த மென்திறமைகளாக கருதப்படுகின்றன.


3. குழுப் பணித்திறன்

ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகப் பணியாளர்கள் கொண்ட குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவில் நீங்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது குழுவின் இலக்குகளை எவ்வாறு அடைகிறீர்கள், மற்ற குழுவிலுள்ள பணியாளர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள். ஒரு இலக்கை அடைவதற்கு குழுவில் இருக்கும் வேறுபாடுகளை களைந்து தனிநபர் விருப்பு வெறுப்புகளைக் கடந்து ஒரே அணியாக பணி புரியும் திறன் இருக்க வேண்டும்.


4. நேர மேலாண்மை

பல கோடி மூலதனத்தில் இயங்கும் ஒரு தொழில் நேரம் தவறாமையை முக்கியமாக பார்ப்பார்கள். நேர தாமதத்தை விரும்ப மாட்டார்கள். பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு வராமல் இருத்தல், நேர்முக தேர்வுக்கு தாமதமாக வருவது இவற்றை எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விட வேண்டும். எனவே நேர தாமதமில்லாமல் சரியான நேரத்துக்கு முன்பாக வந்து, குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக முடித்துக் கொடுப்பதும் மென் திறமைகளுள் ஒன்றாகும்.


5. முடிவு எடுக்கும் திறன்

சிந்தித்து முடிவு எடுத்தல், நான் செய்தது சரியானது தான் என வாதம் செய்தல், கடந்த கால அனுபவம், ஆராய்ச்சி மனப்பான்மை, கிடைக்கக் கூடிய வளங்களையும், வாய்ப்புகளையும் அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன் ஆகியவை நிர்வாகத்தினரை கவரும் அம்சங்களாகும். நேர்முகத் தேர்வின் போது இந்த திறன்களை வெளிப்படுத்துவர்கள் சிறந்த மென்திறமையாளர்களாக கருதப்படுகிறார்கள்.


6. ஆளுமைத்திறன்

நீங்கள் நிர்வாகத் தலைமை பொறுப்பில் இருக்கும் போது தினமும் உங்களை சந்திக்க கூடும். நீங்கள் பலரை சந்திக்கும் சூழ்நிலையில் நீங்கள் வகிக்கும் பதவிக்கான கெளரவம், தகுதிகளை பொருட்படுத்தாமல் சாதாரண சமூக மனப்பான்மையுடன் அவர்களிடம் நடந்து கொள்ளும் போது நிச்சயம் நீங்கள் வெற்றிகரமானவர் என்பதை நிரூப்பீர்கள்.


7. படைப்பாற்றல்

இது பொதுவாக மிகவும் குறைவான மதிப்பு கொண்ட மென் திறமைக்கான அளவு கோளாகும். இந்த திறமை பிறரை பாராட்ட பயன்படும் ஒரு திறமையாகவே கருதப்படுவதால், இது அவ்வளவாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நிர்வாகத் துறையில் பெரும்பாலான திறமையாளர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்ததில்லை. நிர்வாகம் இதை அதிகம் எதிர்பார்ப்பதுமில்லை.


8. உள் நிர்வாகத் தொடர்பு

ஒரு நிறுவனத்தில் குழுவினருடன் திறமையாக பணியாற்றுதல், சக பணியாளர்களுடன் சீரான உறவு, பணியாளர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள், தகராறுகளை சமாளித்தல் ஆகியவை சிறந்த குணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் உள் நிர்வாகத்தில் நல்ல தகவல் தொடர்பு மற்றும் சக பணியாளர்களுடன் பழகும் விதமும் ஒரு பணியாளரை தலைமை பதவிக்கு உயர்த்துகிறது.


9. காலத்திற்கேற்ப மாறும் தன்மை

இன்றைய காலகட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள். மாறி வரும் தொழில் நுட்பம் மற்றும் விரைவாக வளர்ந்து வரும் வணிக சூழலில், புதிய தொழில் நுட்பங்களைத் தேர்ந்தெடுப்பதும், வியாபார சூழலை மாற்றி சரி செய்வதும் தொழில் இணக்கத் தன்மைகளாக கருதப்படுகிறது.


10. நட்புணர்வுடன் கூடிய ஆளுமைத் திறன்

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பணியாளர்கள் தாங்கள் விரும்பும் நபரிடம் பணியாற்ற விரும்புவார்கள், மென்மையாக தங்களை வேலை வாங்க வேண்டும் என விரும்புவார்கள், ஆனால் உங்களை விட்டு வேறு இடத்துக்கு வேலைக்கு போகவும் விரும்ப மாட்டார்கள், காரணம் சக தொழிலாளர்களை நீங்கள் நட்பு ரீதியாக நடத்தி வேலை வாங்கும் விதம்தான். இதுதான் நட்புணர்வுடன் கூடிய ஆளுமைத் திறன்.


மு. தியாகராஜன், 

மென்திறன் பயிற்சியாளர், துறைத்தலைவர், தொழில் நிர்வாகவியல் துறை,

அழகப்பா அரசு கலைக் கல்லூரி காரைக்குடி-03.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad