திருநெல்வேலி மாவட்டம், பிப்.16, அம்பாசமுத்திரம், மாஞ்சோலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல இன்றுமுதல் (பிப்.16) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை சுற்றுலா செல்வதற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் அலுவலகத்தையோ அல்லது அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தையோ அணுக வேண்டியதில்லை.
மணிமுத்தாறு வனச்சோதனை சாவடி சென்று வனக்காப்பாளரிடம் நேரில் சென்று செல்லும் வாகனத்தின் பதிவுச்சான்று நகல், வாகன காப்பீடு நகல், ஆதாா் நகல் ஆகியவற்றை வழங்கி அனுமதி பெற்று நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று பின் செல்லவேண்டும்.
நாள் ஒன்றுக்கு 10 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனம், வேன், திறந்தவெளி வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. மலைச்சாலையில் செல்லும் வகையில் உள்ள 10 வாகனங்கள் மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படும்.
வாகனத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை பொருத்தே நபா்கள் அனுமதிக்கப்படுவா்.
சுற்றுலா செல்பவா்கள் காலை 8 மணி முதல் அனுமதிக்கப்படுவா். காக்காச்சி புல்வெளிப்பகுதி வரை சென்று மாலை 5 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். தவறும்பட்சத்தில் வனவிதிகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
பயணத்தின் போது தடை செய்யப்பட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், மதுபானங்கள், பாலீதின் பைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
வானிலை நிகழ்வுகள், வனவிலங்குகளின் நடமாட்டங்கள் மற்றும் சாலையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து சூழல் சுற்றுலாவிற்கு தடை விதிப்பதற்கு வனத்துறைக்கு முழு அதிகாரம் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக