உலகப் புகழ்பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் தற்போது பொங்கல் தொடர் விடுமுறையின் காரணமாக கடந்த சில தினங்களாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அதிகாலையில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் சுமார் 5 மணி முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் அருகே உள்ள மண்டபம் அறைகளில் அடைக்கப்பட்டு சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக காத்து நிற்க வைக்கப்படுகின்றனர்.
மேலும் அந்த மண்டப அறைகளில் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளோ செய்யப்படவில்லை. இதனால் கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் திருச்செந்தூர் வருகை தந்தனர்.
அமைச்சர்கள் மற்றும் எம்பி வருகைக்காக விருந்தினர் மாளிகை முன்பு அதிகாரிகள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் அங்கு வந்து இறங்கினர்.
அப்போது பொது தரிசன அறையில் அடைக்கப்பட்டிருந்த பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வருகிறோம் என தங்கள் கோரிக்கைகளையும் வேதனைகளையும் தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் தர்ம தரிசனத்தில் காத்திருக்கும் பக்தர்களை வஞ்சிக்கும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டிக்கிறோம் என்று பக்தர்கள் கூட்டத்தில் நின்ற ஒருவர் கோஷமிட அதைத் தொடர்ந்து தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் அனைவரும் கோஷமிட்டனர்.
ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொகுசு காருக்கு சைடில் வேகமாக நடந்து வந்தார்.
பக்தர்கள் எதற்காக கோஷமிட்டார்கள் என்று கனிமொழி அமைச்சர் சேகர்பாபுவை நோக்கி கேட்டார். அதுக்கு என்ன செய்ய முடியும்? திருப்பதிக்கு போனால் 24 மணி நேரம் நிப்பான் அது கணக்குல வராது. என அதிகாரிகள் புடைசூழ அலட்சியமாக பேசிவிட்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
திருப்பதியில் நடக்காததா இங்கு நடந்து விட்டது என்ற தொணியில் அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூரில் பொது தரிசன பக்தர்களை பார்த்து அலட்சியமாக பேசியிருப்பது பக்தர்களிடையே பெறும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அமைச்சரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக விருந்தினர் மாளிகைக்கு வெளியே காத்திருந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியும் பக்தர்களின் அபாய குரலையும் புலம்பலையும் கண்டும் காணாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக