பக்தர் தவறவிட்ட 15 பவுன் நகை கண்டெடுத்து ஒப்படைத்த டீ வியாபாரி. வணிகர் சங்க மண்டல தலைவர் வேலாயுத பெருமாள் பாராட்டு
நெல்லையைச் சேர்ந்தவர் ரகுநாதன் நெல்லை அரசுப் போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயிலுக்கு கடந்த 24ம்தேதி வந்திருந்தார்.
விடுமுறை தினமாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் நேமிதங்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்ய கோயில் வளாகத்தில் கூடியிருந்தனர். இதனால் ரகுநாதன் குடும்பத்தினர் தங்களது நகைகளை கழற்றி பையில் வைத்தனர். இரவில் பையைப் பார்த்த போது 15 பவுன் நகையைக் காணவில்லை. கோயில் வளாகத்தில் தேடியும் நகை கிடைக்கவில்லை.
உடன்குடி சிதம்பரத் தெருவைச் சேர்ந்த காதர் மீரா சாகிப் என்பவர் கோவிலில் சைக்கிளில் வைத்து டீ வியாபாரம் செய்து வந்தார். அப்போது கோயில் வளாகத்தில் 15 பவுன் நகை கிடப்பதை காதர் கண்டெடுத்து கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து அவர் மூலமாகவே ரகுநாதன் குடும்பத்தினரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே "கல்விக்கு கைகொடு" அமைப்பின் நிறுவன தலைவரும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தூத்துக்குடி மண்டல தலைவருமாகிய வி.எம்..வேலாயுத பெருமாள் காதர் மீரா சாகிப்பை நேரில் சந்தித்து பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டினார்.
மேலும் கீழே கிடந்த நகையை கண்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த காதர் மீரா சாகிப்பை கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகேஸ்வரன், முன்னாள் தலைவர் சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள், ஊர் மக்கள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக