திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேமுதிக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மறைந்த முன்னாள் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த குருபூஜை விழா தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் குறித்து உருக்கமாக எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில்,
“கர்மவீரர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், ஏழைகளை தங்கத்தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும், ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு வாழ்ந்து மறைந்தவர் நமது புரட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆவார்,” என்றார்.
மேலும்,
“திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்து, சாதாரண மக்கள், விவசாயிகள், ஏழைகள், நடுத்தர மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், பொது மேடைகளிலும் ஒலித்தவர் கேப்டன். மக்கள் நலனுக்காக எந்த அதிகாரத்துக்கும் அஞ்சாமல் பேசியவர். அவர் மண்ணை விட்டு மறைந்தாலும், மக்களின் மனதை விட்டு என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என்று கூறினார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விட்டுச் சென்ற மக்கள் நலப் பாதையை தேமுதிக கழகத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும்,
“நாம் அனைவரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, இப்போதே சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அதிகளவில் தொண்டர்கள் கலந்து கொண்டு, திருப்பூர் தெற்கு மாவட்டத்தை தேமுதிக கட்சியின் பலமான பகுதியாக மாற்ற வேண்டும்,” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் கந்தசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா, தாராபுரம் நகரச் செயலாளர் ரஞ்சித் குமார், தாராபுரம் ஒன்றியச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், கொளத்துப்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் முருகன், சின்னக்கம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் சௌந்தர்ராஜ், குண்டடம் ஒன்றியச் செயலாளர் நாச்சிமுத்து, மூலனூர் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், உன்னிடம் பேரூர் கழகச் செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, நகரப் பொருளாளர் தா.ந.முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக
அண்ணா சிலை, கொளத்துப்பாளையம், கரையூர், அலங்கியம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த குருபூஜை நிகழ்ச்சிகளில் தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, புரட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக