திமுக மகளிர் மாநாட்டுக்கு எதிர்ப்பு – கருப்பு பலூன் பறக்க விட்ட இந்து மக்கள் கட்சி மகளிர் அணியினர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 டிசம்பர், 2025

திமுக மகளிர் மாநாட்டுக்கு எதிர்ப்பு – கருப்பு பலூன் பறக்க விட்ட இந்து மக்கள் கட்சி மகளிர் அணியினர் கைது



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று நடைபெறும் திமுக மகளிர் மாநாட்டை கண்டித்து,


தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் கருப்பு பலூன் பறக்க விட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் தாராபுரம் நகர மகளிர் அணி தலைவர் செல்வராணி தலைமை தாங்கினார். இதில் ஐந்து பெண்கள் கலந்து கொண்டு திமுக நடத்தும் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற மகளிர் மாநாட்டை கடுமையாக கண்டித்தனர். மேலும், அந்த மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள கனிமொழியை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகரித்து வருவதால் குடும்பங்கள் சீர்குலைந்து வருவதாக தெரிவித்தனர்.


 மதுப்பழக்கத்தால் பல குடும்பங்களில் கணவன்–மனைவி இடையே தகராறுகள் அதிகரித்துள்ளதாகவும், பல பெண்கள் தங்களது தாலியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.


குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் மது விற்பனையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக மது வாங்குவதற்கே கணவர்கள் செலவிடுவதால் குடும்பச் செலவுகளுக்கு பணமில்லாமல் பெண்கள் தவித்து வருவதாகவும் தெரிவித்தனர். 


பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன், குடும்ப வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினர்.


இந்நிலையில், பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, மகளிர் மாநாடு நடத்துவது ஏமாற்று நாடகம் எனவும், இதனை கண்டித்தே கருப்பு பலூன் பறக்க விட்டு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.


இந்த தகவல் அறிந்த தாராபுரம் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்களையும் உடனடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad