மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்களின் கண்டன அறிக்கை..
நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் வழங்கிய கையோடு, நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்ய வேண்டுமென்று வியாபாரிகளை வற்புறுத்துகின்றனர் அத்துடன், குன்னூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத, வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கியுள்ளனர். இதனால், அப்பாவி வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் 2000 குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வியாபாரிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு எனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
குன்னூர் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என்று திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பெரும் முயற்சி செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, வியாபாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி திமுக அரசு நகராட்சிக் கடைகளுக்கு பலமடங்கு வாடகைகளை உயர்த்தியது.
480 சதுர அடி கொண்ட கடைக்கு, 2016-ஆம் ஆண்டில் வாடகை 2951-ஆக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு வாடகை 31,200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த வாடகையை குறைக்க வேண்டுமென்று வியாபாரிகள் போராடிய நிலையில், தற்போது கடைகளையே காலி செய்ய சொல்லி திமுக அரசு அச்சுறுத்தி வருகிறது.
இதன் பின்னணியில் பெரிய அளவில் சதி திட்டம் இருக்குமோ என்ற அச்சம் வியாபாரிகளிடையே இருந்து வருகிறது. வியாபாரிகளை காலி செய்து விட்டு அந்த இடத்தை திமுகவினர் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற அச்சமும் வியாபாரிகளிடையே உள்ளது.
இந்த, வியாபாரிகள் விரோத நடவடிக்கைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் உடந்தையாக உள்ளனர். திமுக அரசின் இந்தச் செயலால் வியாபாரிகள் மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
திமுக அரசு இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். அந்த கடைகள் செயல்பட அனுமதிப்பதுடன், உயர்த்தப்பட்ட கடை வாடகையையும் திரும்பப் பெற வேண்டுமென்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக