தாராபுரம், ஆக.26: தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக செல்லும் பொதுமக்கள் ஆற்றில் சிக்கி உயிரிழப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், சங்கத் தலைவர் கே.கருணாநிதி, தாராபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வழியாக பாயும் அமராவதி ஆற்றில், இப்பகுதியில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள், குடும்ப நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள், இந்த வழியாக பயணம் செய்யும் பயணிகள் உள்ளிட்டோர் நெடுஞ்சாலை அருகில் உள்ள அமராவதி ஆற்றில் இறங்கி, குளித்து வருகின்றனர். சில நேரங்களில் எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி, தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
வருடம்தோறும் சுமார் 10 பேராவது ஆற்றில் சிக்கி, உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் துயரத்தில் ஆழ்ந்து வருகின்றன.
எனவே, தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் செல்லும் பொது மக்கள் உயிரிழப்பதை தடுப்பதற்காக ஆற்றங்கரையில் கம்பி வேலி அல்லது தடுப்பு ஏற்படுத்தி, நீரில் மூழ்கும் அபாயம் குறித்த எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். ஆற்றின் அருகே பொதுமக்கள் குளிக்கும் பகுதிகளில் உயிர் காக்கும் கருவிகளை எப்போதும் வைத்திருப்பதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியின் போது தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக