தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் என ஐந்து பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது :- தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியாக விளையாடக்கூடிய விளையாட்டு வீரர்கள் என ஒவ்வொரு விளையாட்டு பிரிவின் கீழ் நமது மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் நடைபெறுகின்ற போட்டிகளில் கலந்து கொள்ளுகின்ற வகையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கின்ற நிகழ்ச்சி இன்றையதினம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருக்கின்ற தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் தமிழ்நாட்டில், விளையாட்டு பல்வேறு வகையில் வளர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தினார்கள். குறிப்பாக உலக அளவில் நடைபெறுகிற செஸ் ஒலிம்பியாட், ஆசியன் ஹாக்கி போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி, நம்முடைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைத்து வகையிலும், விளையாட்டுத்துறையில் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது.
மாநில அளவில் ஹரியானாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் தான் அதிகமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள் என்ற நிலையினை மாற்றி, தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு முதன்முறையாக சீனியர் சாம்பின்ஷிப் தடகளப் போட்டி முதலிய போட்டிகளில் முதலிடம் பெற்று வரலாறு படைத்துள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய அனைத்து நபர்களையும் அடையாளங் கண்டு, அவர்களை மாநில மற்றும் அகில இந்திய அளவில் நடைபெறக்கூடிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் தமிழகம் எல்லா வகையிலும் வெல்லும் என்ற நிலையினை உருவாக்கி வருகிறார்கள்.
விளையாட்டு வீர்ர்களுக்கு சிறந்த பரிசுகளை அளித்து வருகிறார்கள். போட்டிகளில் கலந்து கொள்கின்ற மாணவர்கள் தங்களது உடல் திறன் மற்றும் மனத்திறன்கள் மட்டுமல்லாது அனைத்து வகையிலும் எதையும் வெல்ல முடியும் என்ற வரலாறு படைக்கிறவர்களாக உருவாக வேண்டும் என உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது :-
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பெருமளவிலான விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் பதிவு செய்து நமது மாவட்டத்திலிருந்து பங்கேற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு பதிவு செய்துள்ளனர். 178 பிரிவுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் நமது மாவட்டத்திலேயே இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சில முக்கிய விளையாட்டு போட்டிகளான, குறிப்பாக ஹாக்கி, கால்பந்து முதலிய போட்டிகளில் எல்லாம் நமது மாவட்டம் சிறப்பிடம் பெற்று விளங்குவதால், மாநில அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு திறன் பெற்று இருக்கிறோம். இது போன்ற நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கல்வி நிலையங்களிலும் பயிலக்கூடிய மாணவர்கள் இளம்வயதிலே தங்கள் உடல்திறனை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக, ஒவ்வொரு மாணவர்களும் ஒன்று அல்லது இரண்டு விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து, தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக தங்களது உடல் மற்றும் உள்ளத்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், தமிழ்நாடு அரசு, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று விளங்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில குறிப்பாக தொழில்கல்வி வாய்ப்புகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை அளிக்கிறது. கடந்த ஆண்டு மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பிடம் பிடித்த நமது மாவட்டத்தை சார்ந்த 540க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட பிற தொழிற்கல்விகளில் இடஒதுக்கீடு பெறுவதற்காக தகுதி பெற்றிருந்தனர். அதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகசிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்கு ஏதுவாக அந்த கல்வி நிறுவனங்களின் கல்வி உதவித்தொகையை பெற்று, சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்கின்ற மாணவர்களுக்கு அந்த கல்வி நிறுவனங்களே உதவித்தொகை கொடுத்து நேரடியாக சேர்த்துக் கொண்டிருக்கிறது.
அதுபோன்று 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி போன்ற படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
விளையாட்டின் மூலம் நமது உடல் உறுதிப்படும். உள்ளம் மேம்படும். கல்வி சிறந்து விளங்கும். மாணவர்களின் வாழ்க்கை மேம்படும். விளையாடு வீரர்களாக இருக்கக்கூடியவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டத்தில் எவ்விதமான மன திசைதிருப்புதலுக்கும் ஈடுபடாமல், பல்வேறு விதமான தீயப்பழக்கங்களை ஈடுபடக்கூடிய வாய்ப்பினை முற்றிலுமாக தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களது இந்த இளமைகாலத்திற்கான விளையாட்டுப் போட்டித் திறன் உங்களுக்கு பேரூதவியாக இருக்கும். மாணவர்களாகிய நீங்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்று மேன்மேலும் உயர்ந்த இடங்களுக்கு சென்று தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இன்று (26.08.2025) பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், மேஜைப்பந்து, பேட்மிண்டன், கூடைப்பந்து ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்திலும் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் வ.உ.சி. கல்லூரியிலும் வைத்து தொடங்கியது. போட்டியில் 5748 பேர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்
எஸ். அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) து.சிதம்பரநாதன், அரசு அலுவலர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக