ஆபத்தான வளைவு பகுதியில் குறுகிய தூரத்திற்கு மட்டுமே சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைத்துள்ளதால் தொடரும் விபத்துக்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

ஆபத்தான வளைவு பகுதியில் குறுகிய தூரத்திற்கு மட்டுமே சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைத்துள்ளதால் தொடரும் விபத்துக்கள்.

ஆபத்தான வளைவு பகுதியில் குறுகிய தூரத்திற்கு மட்டுமே சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைத்துள்ளதால் தொடரும் விபத்துக்கள்


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளி கோடு பகுதியில் ஆபத்தான வளைவு பகுதிகள் உள்ளது. குமரி மாவட்டத்திலேயே அதிக அளவு விபத்துக்கள் நடக்கும் பிளாக் ஸ்பாட் பகுதி என தக்கலை காவல்துறையால் முன்பு வரையறுக்கப்பட்ட பகுதியில் தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்னர் அப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. 

அந்த தடுப்புச் சுவர் சுமார் 450 மீட்டர் தூரம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் சுமார் இரண்டு வளைவுகளிலும் தலா 30 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலை நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் எதிரெதிரே வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது தடுக்கப்பட்டு தற்போது சாலை நடுவே தடுப்பு சுவர் மீது மோதும் அவலம் தொடர்ந்து வருகிறது. 


சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது 450 மீட்டர் தூரம் இரு வளைவு பகுதிகளையும் ஒருங்கிணைத்து சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் அப்போது நிதி நிலையை காரணம் காட்டி குறுகிய தூரத்தில் மட்டும் இரு வளைவுகளையும் தனித்தனியாக பிரித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அப்போதைய மாவட்ட ஆட்சியரின் சாலை பாதுகாப்பு திட்ட நிதியில் இருந்து சுமார் 30 மீட்டர் தூரம் மட்டுமே அமைத்ததன் விளைவாக அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. 

பகலில் கனிமவள கடத்தல் லாரிகள் தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி கட்டுப்பாட்டில் இருந்தாலும் இரவு நேரத்தில் சாரை சாரையாக அதிக அளவில் கனிமவள டாரஸ் லாரிகளில் கேரளாவுக்கு கனிமவள கடத்தல் அதிக அளவு நடந்து வருகிறது. 

அதில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கனிமவள லாரிகள் கேரள பதிவு எண்களை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பகலில் நேர கட்டுப்பாடு அமலில் இருப்பதால் இரவு நேரத்தில் அதிக வேகத்தில் கனிமவள வாகனங்களை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. 

குமரி மாவட்டத்தில் அதிக அளவு விபத்துகளுக்கு காரணம் கனிம வள லாரிகளாக இருப்பதுதான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தற்போது வெள்ளிக்கோட்டில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் இரு குறுகிய வளைவு பகுதிகளில் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர்கள் மீது வாகனங்கள் மோதாமல் இருக்க தக்கலை போக்குவரத்து போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைத்தும் இரு குறுகிய வளைவுகளிலும் தனித்தனியே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 

மேலும் சாலை தடுப்புகளில் மோதும் வாகனங்களால் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் சேதம் அடையும் போது சேதத்தை ஏற்படுத்தியவர்களிடமிருந்து அந்த சேதத்தை சரி செய்யும் நடவடிக்கைகள் இதுவரையும் போலீசாராலோ அல்லது நெடுஞ்சாலைத் துறையினராலோ எடுக்கப்படவில்லை என்பதுதான் வியப்பு கலந்த அதிர்ச்சியாக உள்ளது. 

இதனால் குறுகிய தூரத்தில் இரு ஆபத்தான வளைவு பகுதிகளிலும் தனித்தனியாக பிரித்து அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் விபத்துக்களால் சேதம் அடைந்து அதன் நீளம் குறைந்து வருவதும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது. 

ஆகவே கனிமவள லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதோடு வெள்ளி கோடு பகுதியில் இரு குறுகிய வளைவு பகுதிகளையும் ஒருங்கிணைத்து 450 மீட்டர் தூரத்திற்கு சாலை நடுவே தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே அப்பகுதியில் சாலை தடுப்புகளின் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்க முடியும். மேலும் நள்ளிரவு ஒரு மணிக்கு அப்பகுதியில் விபத்து ஏற்பட்டவுடன் சாலை அப்பகுதியில் அகலமாக இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருந்தது என்பதும் காலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் போது வாகனங்களை ஒழுங்கு படுத்த போலீசார் அப்பகுதியில் இல்லை என்பதும் இதனால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் விபத்து தொடர்பாக சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவர்கள் சேத விபரத்தை போலீசார் கணக்கில் எடுத்து அதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பது தான் தற்போதைய கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad