தூத்துக்குடி மாவட்டம், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (01.12.2025), பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்றது.
அரசு விழாவில் பள்ளி மாணவ மாணிவயர்களுக்கு 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான 661 மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற இந்நிகழ்வில் மாணவர்களாகிய உங்களை சந்தித்து வருகிறோம். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்கள் மற்றும் கைபேசிகளை கவனமாக உபயோகப்படுத்துங்கள். பாடம் சம்பந்தமாக தேடுதல் உள்ளிட்ட தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். தொலைக்காட்சி உள்ளிட்டவைகளின் மூலம் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்கி விடாதீர்கள்.
இந்த பருவத்தில் நீங்கள் படிக்க வேண்டியது தான் உங்களின் கடமை. மேலும், நீங்கள் என்ன கலைகளை கற்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அனைத்தையும் இந்த வயதில் நீங்கள் கற்க முடியும். அனைத்தையும் கற்றுக் கொண்டு சிறந்த அறிவாற்றல் மிக்கவர்களாக சிறந்து விளங்க வேண்டும்.
நீங்கள் சிறந்த சான்றோர்களாக, வெற்றியாளர்களாக, அனைத்தையும் கற்றுக் கொண்டு சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது :-
மிதிவண்டியை வாங்கும் அனைத்து மாணவிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக மட்டும் தான் மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் ஆண்குழந்தைகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றால், பெண் குழந்தைகளுக்கு தான் கல்வி கற்பதில் பல்வேறு தடைகள் இருந்தது. நீண்ட தொலைவு சென்று கல்வி கற்பதற்கு தயங்க கூடாது எனவும், தனிப்பட்ட வகையில் பெண் குழந்தைகள் வெளி இடங்களுக்கு சென்று வருவதற்கான சுதந்திரத்தையும், மனதைரியத்தையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக தான் பெண் குழந்தைகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தான் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த மிதிவண்டிகளை பெறக்கூடிய உங்களது தன்னம்பிக்கையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் மென்மேலும் உயரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியின் 273 மாணவர்களுக்கும் மற்றும் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 388 மாணவியர்களுக்கும் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மிதிவண்டிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக