நாகர்கோவில் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவர்களுக்கு காவல்துறை பணியின் முக்கியத்துவம், சட்ட ஒழுங்கு பாதுகாப்பில் காவல்துறை வகிக்கும் பங்கு பற்றி அதிகாரிகள் எளிய முறையில் விளக்கினார்கள்.
முதலில் போக்குவரத்து பூங்கா பகுதியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள், சிக்னல்கள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் பயன்பாட்டின் அவசியம் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
பின்னர் குழந்தைகள் பூங்கா மற்றும் உடற்பயிற்சி வசதிகளை நேரில் கண்டு காவலர்கள் தினமும் மேற்கொள்ளும் உடற் பயிற்சிகள் குறித்து விளக்கம் வழங்கப்பட்டது.
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பிரிவில் மாணவர்கள் காவல்துறையினர் பயன்படுத்தும் பல்வேறு வகை துப்பாக்கிகள், ஆயுதங்களை பாதுகாப்பாக கையாளும் முறைகள் குறித்து அறிந்தனர். ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பிரிவில் கொடுக்கப்பட்ட இந்த நேரடி விளக்கங்கள் மாணவர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தின.
வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையினர் (BDDS)நடத்திய செயல்முறை பயிற்சியில் விசாரணை நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் நாய்கள் எவ்வாறு தடயங்களை இனங்கண்டு குற்றவாளிகளை பிடிக்க உதவுகின்றன என்பதைக் கண்டு மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். நாய்கள் கட்டளைகளை முறையாகக் கடைப்பிடித்த விதம் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது.இறுதியாக காவலர்களின் தினசரி பணித்திட்டம், கடமைகள், காவலர் ஆவதற்கான தகுதி, தேர்வு முறைகள் பற்றியும் போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட ஆயுதப்படையில் உள்ள வெற்றிப் பாதை படிப்பகத்தை பற்றியும் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மாணவர்கள் காவல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கேள்விகளை எழுப்பினர். காவல் துறையில் சேர வேண்டும் என்பதற்கான உற்சாகம் பலரிடமும் உருவானதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக