தாராபுரம் வெறிநாய் தாக்குதலில் 7-ஆடுகள் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜனவரி, 2026

தாராபுரம் வெறிநாய் தாக்குதலில் 7-ஆடுகள் பலி.


₹2.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில், வெறிநாய் தாக்குதலில் 25 செம்மறி ஆடுகள் கடித்து குதறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் இறந்தும், இறக்கும் தருவாயிலும் இருப்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


நல்லாம்பாளையம் ஆண்டி பணக்காடு தோட்டத்தைச் சேர்ந்த மகுடபதி (38) மற்றும் அவரது தாயார் ஈஸ்வரி (55) ஆகியோர், ஆடு வளர்ப்பை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்களிடம் 50-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இருந்த நிலையில்,  நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திடீரென அதிக சத்தமிட்டுள்ளன.


இதனை கேட்டு வெளியே வந்து பார்த்த ஈஸ்வரி, மூன்று தெரு வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்ததை அடுத்து, டார்ச் லைட் உதவியுடன் பொதுமக்கள் விரைந்து வந்தனர். அதற்குள் 25 ஆடுகள் கடுமையாக தாக்கப்பட்டிருந்தன. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மீதமுள்ள 18 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தன.


இதுகுறித்து கால்நடைத் துறை மருத்துவர் தேவி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர், காயமடைந்த ஆடுகளுக்கு உடனடி சிகிச்சை அளித்தார். தகவலறிந்து தாராபுரம் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு தான் எங்களின் பிரதான வாழ்வாதாரம். பண்டிகை காலங்களில் ஆடுகளை சந்தைகளில் விற்பனை செய்து, கிடைக்கும் வருமானத்தின் மூலம் குடும்ப செலவுகளை நடத்தி வருகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் வெறிபிடித்து சுற்றி வருகின்றன. ஒரு கிராமத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிவதாகவும், போதிய உணவின்றி பட்டிகளில் உள்ள ஆடுகள், மாடுகள், கோழிகளை தாக்குவதாகவும் தெரிவித்தனர்.


கடந்த இரண்டு நாட்களில் மட்டும், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று இடங்களில் வெறிநாய் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், இது விவசாயிகளை கடுமையாக பாதித்து வருவதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.


பட்டிகளில் இருக்கும் ஆடுகளை நாய்கள் எளிதில் தாக்குவதால், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஒரு ஆடு இறந்தால், அதற்கான விலை மட்டுமின்றி, அதன் எதிர்கால இனப்பெருக்கம், பால் உற்பத்தி, சந்தை வாய்ப்புகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் பறிபோகின்றன. இதனால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடன் சுமையில் சிக்கி, வாழ்வாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதாக, தெரிவித்தனர்.


எனவே, வெறிநாய்களை பிடித்து கட்டுப்படுத்த அரசு நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஈஸ்வரி குடும்பத்திற்கு ஏற்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான இழப்புக்கு அரசு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தொடர்ந்து தாராபுரம் பகுதிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து, ரத்தத்தை குடித்து விட்டு செல்வதாக கூறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad