நேற்று மாலை முதல் இன்று காலை வரை அத்திமரப்பட்டியில்16 மணி நேர மின்தடையால் மக்கள் கடும் பாதிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 பிப்ரவரி, 2026

நேற்று மாலை முதல் இன்று காலை வரை அத்திமரப்பட்டியில்16 மணி நேர மின்தடையால் மக்கள் கடும் பாதிப்பு.

நேற்று மாலை முதல் இன்று காலை வரை அத்திமரப்பட்டியில்16 மணி நேர மின்தடையால் மக்கள் கடும் பாதிப்பு 
 
பிப். 26- தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, குலையன்கரிசல், கோரம்பள்ளம், அய்யனடைப்பு, காலாங்கரை, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், ஸ்பிக்நகர், முள்ளக்காடு பகுதிகளில் நேற்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து, லேசான மழையாக மாறி, இரவு 9 மணி வரை சாரல் மழையாக தூறி கொண்டிருந்தது.
          
இந்நிலையில், நேற்று மாலை மழை தொடங்கியவுடன், பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு, மழை நின்றவுடன் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், அத்திமரப்பட்டியில் மட்டும் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி வரை மின்தடையே நீடித்தது. விடிய விடிய மின்சாரம் இல்லாததால், 

ஆண்டு இறுதி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ மாணவிகள் படிக்க முடியாமலும், பொதுமக்கள் இரவு முழுவதும் கொசுக்கடியால் தூங்க முடியாமலும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்று காலை 9.30 மணி வரை வராததால், வேலைக்கு செல்பவர்களுக்கு உணவு சமைப்பதில் பெண்கள் சிரமப்பட்டனர். 

தொடர்ச்சியாக 16 மணி நேரத்திற்கு மின்தடை நீடித்ததால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
          

இதுகுறித்து விவசாயியும், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அத்திமரப்பட்டியை சேர்ந்த வீ.இளங்கோவன் கூறுகையில்,ஏற்கனவே அத்திமரப்பட்டி பகுதியில் லேசாக மழை பெய்தாலும், உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் மழை நின்ற பிறகும், பல மணி நேரத்திற்கு மின்சப்ளை வராது. ஆனால், எப்போதுமே இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக 16 மணி நேரமாக மின்தடை நீடிப்பது இப்போதுதான் முதல்முறையாக கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து நேற்று இரவு மின்தடை தொடர்பாக, நானும், பொதுமக்கள் பலரும் விபரம் கேட்பதற்காக, முத்தையாபுரம் (வடக்கு) மின்வாரிய உதவி பொறியாளருக்கு பலமுறை போனில் தொடர்பு கொண்டும், அவர் ஒருமுறை கூட எடுத்து பேசவில்லை. மின்வாரிய ஊழியர்களுக்கு போன் செய்தால், போனை அணைத்து வைத்து இருக்கிறார்கள். இனிமேலும் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி முத்தையாபுரம் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவோம்" என்றார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad