ஆதரவற்றோருக்கு மரியாதையான நல்லடக்கம் – தாராபுரத்தில் 238வது உடல் அடக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 பிப்ரவரி, 2026

ஆதரவற்றோருக்கு மரியாதையான நல்லடக்கம் – தாராபுரத்தில் 238வது உடல் அடக்கம்


ஏஜிபி அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சேவை தொடர்ச்சி – காவல்துறை ஒத்துழைப்புடன் மனிதநேய முயற்சி.


திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஆதரவற்ற நிலையில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களுக்கு மரியாதையான இறுதி சடங்கு நடத்தி வரும் ஏஜிபி அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பில், 238வது ஆதரவற்றோர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தாராபுரம் நகரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணி (வயது 57), கடந்த சில ஆண்டுகளாக ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த அவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடலை பெற உறவினர்கள் யாரும் முன்வராததால், மனிதநேய உணர்வுடன் செயல்படும் அறக்கட்டளை நிர்வாகம் காவல்துறையின் அனுமதி பெற்று இறுதி சடங்கு நடத்த நடவடிக்கை எடுத்தது.


தாராபுரம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், துணை காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், தலைமை காவலர் கோதண்டராமன் ஆகியோரின் ஒத்துழைப்புடன், அறக்கட்டளை சார்பில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்த மனிதநேய பணியில் அமைப்பின் தலைவர் ஏ. சையது அபுதாஹிர், செயல்தலைவர் சிவசங்கர், சமூக ஆர்வலர் ஜாபர்சாதிக், பத்திரிகையாளர் அக்கீம், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், சாதிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


ஆதரவற்றோரின் உடல்களை அடையாளம் தெரியாமல் கைவிடாமல், மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அறக்கட்டளையின் இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. இதுவரை 238 ஆதரவற்றோர் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad