திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சாலை பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பணிகளை துவக்கி வைத்தனர்.
கலைஞர் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூலனூர் பேரூராட்சியில் ஓடை புறம்போக்கு வீதி, நாச்சிபாளையம் சாலை, கோட்டை மூலனூர் குறுக்கு வீதிகள், ஆதிதிராவிடர் காலனி பகுதிகள், மூவேந்தர் நகர், பி.எஸ்.என்.எல் அலுவலகம் முதல் வஞ்சிவலசு சாலை வரை, வெள்ளகோவில் மெயின் சாலை மற்றும் வடுகபட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மண் சாலைகளை தார்சாலையாக மாற்றுதல் மற்றும் பழுதடைந்த சாலைகளை பலப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், பேருந்து நிலையம் தென்புறம் உள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்ற ரூ.48 லட்சம், பல்வேறு குறுக்கு வீதிகளில் சாலை பலப்படுத்த ரூ.1.40 கோடி, மேலும் சில பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கன்னிவாடி பேரூராட்சியில் மொங்கநல்லாம்பாளையம் பகுதியில், கரூர்–தாராபுரம் சாலையிலிருந்து நாரணாவலசு எல்லை வரை உள்ள பழுதடைந்த தார்சாலையை ரூ.66.50 லட்சம் மதிப்பில் பலப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக முதலமைச்சர் M. K. Stalin அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் பேரூராட்சி தலைவர் தெண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக