திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 26-வது ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை மாலை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் கே. ரங்கசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் துரை கதிரவேல், திருப்பூர் மாவட்ட தலைவர் சிவநாதன், சேலம் மாவட்ட செயலாளர் ஆர். செல்லப்பன், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பிரசாத், கோவை மாவட்ட தலைவர் ரவிக்குமார், செயலாளர் கொங்கு ரமேஷ், சேலம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் செல்விகுமார், மகளிர் அணி நிர்வாகி சந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தாராபுரம்–காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய நிறுவனத் தலைவர் சங்கர், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சராக ஆதரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க-க்கு ஆதரவாக கொங்கு தமிழர் எழுச்சி பேரவை சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் உ. தனியரசு திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், இது கொங்கு மக்களுக்கு துரோகம் எனவும் அவர் குற்றம் சாட்டினார். தனியரசு போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக கொங்கு தமிழர் எழுச்சி பேரவை பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
கோவை செழியன் குறித்து அவர் பேசும்போது, கொங்கு மண்டலத்தின் முக்கிய அரசியல் தலைவராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் அவர் அறியப்பட்டவர் என்றார். காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட அவர், எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கி பின்னர் அ.தி.மு.க-வில் முக்கிய பங்காற்றினார்.
மேலும் பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த அவர், இசையமைப்பாளர் இளையராஜாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் பெற்றவர். கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர் என்றும், அவரது வழியில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை செயல்பட்டு சமூக கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும் சங்கர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக