வரும் ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் திருக்குறள் நூலினையும் வழங்க வேண்டும்! பயிலரங்க கூட்ட நிறைவு விழாவில் தீர்மானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 மார்ச், 2026

வரும் ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் திருக்குறள் நூலினையும் வழங்க வேண்டும்! பயிலரங்க கூட்ட நிறைவு விழாவில் தீர்மானம்!

வரும் ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் திருக்குறள் நூலினையும் வழங்க வேண்டும்! பயிலரங்க கூட்ட நிறைவு விழாவில் தீர்மானம்!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் பயிலரங்க கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்திற்கான கூட்டங்களை நடத்திட மூன்று அணிகள் உருவாக்கப்பட்டது. அதில் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி தலைமை தாங்கி நடத்திய பயிலரங்க கூட்டங்களின் நிறைவு விழா நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. பொருநை இலக்கிய வட்டப் புரவலர் தளவாய் நாதன் முன்னிலை வகித்தார். தாமிரபரணி வாசகர் வட்டத் தலைவர் சரவணக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் தவலேந்து மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குனர் இளங்கோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் . பெரும்பாலான கூட்டங்களில் பங்கேற்றுச் சிறப்பித்த 30-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்களுக்கு சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து 'ஞானத்தின் மானப் பெரிது' எனும் தலைப்பில் தூய தமிழ்ப்பற்றாளர் ஜெயபாலனும் 'பண்புடையார் பட்டுண்டு உலகம்' எனும் தலைப்பில் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியனும் குறள் உரையாற்றினர். முன்னதாக பேராசிரியர் ஹரிஹரன், கவிஞர் மூர்த்தி, தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

கவிஞர் முத்துசாமி, கவிஞர் சுப்பையா, கவிஞர் புன்னைச்செழியன், கவிஞர் காயல் அருள், சமூக ஆர்வலர் ஜவகர் துரை, பள்ளித் தாளாளர் இரவிச்சந்திரன், முனைவர் சொர்ணவல்லி, கவிஞர் செ.ச.பிரபு, எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம், எழுத்தாளர் அகரம் தளவாய், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம் ஆகியோர் பாராட்டப்பட்டனர். 

நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவ - மாணவிகளுக்கு திருக்குறள் உரை நூல் வழங்கப்பட்டது. நூலகர் அகிலன் முத்துக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். மேனாள் துணை ஆட்சியர் தியாகராஜன், மேகலிங்கம், கவிஞர் காஞ்சனா, புலவர் வை.இராமசாமி, புகைப்படக் கலைஞர் துரைராஜ், இராமலிங்கம், கவிஞர் மணிமொழி செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிறைவாக தமிழ்நாட்டில் அனைவரது இல்லத்திலும் திருக்குறள் நூல் இடம் பெறும் பொருட்டு வரும் ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் திருக்குறள் உரைநூல் அனைவருக்கும் இலவசமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad