திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகிலுள்ள மேட்டுக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடை எண் 34/41 மற்றும் அதனுடன் இணைந்த பார் காரணமாக அப்பகுதி மக்கள், குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காலை நேரத்திலேயே சட்டத்திற்கு புறம்பாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சிலர் அதிகாலையிலேயே மதுபானம் அருந்தி அதே வழியாக கட்டுப்பாடின்றி வாகனங்களில் செல்வதால் சிறிய அளவிலான விபத்துகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த வழியே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருவதால், பெற்றோர் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களும் அதே பாதையை பயன்படுத்துவதால் சிரமம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மதியம் 12 மணிக்கு கடை திறக்கப்படுவது போலவே காலையிலும் கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், சட்டவிரோத விற்பனை குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் பார் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எப்போதும் மதுபானம் எளிதில் கிடைப்பதால், சிலர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அங்கங்கே படுத்துக் கிடக்கின்றனர். இதனால் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பெண்கள் மிகுந்த மனவேதனை அடைகின்றனர். சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்த மதுபான கடை மற்றும் பார் உடனடியாக மூடப்பட வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பார் நடத்தி வருவதாக கூறப்படும் மணிகண்டன் என்ற நபர், “என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்று சமூக ஆர்வலர்களை மிரட்டி வருவதாகவும், காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் குறித்து அவதூறான வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மேட்டுக்கடை பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் கள்ளச் சந்தை நடைபெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டின் மீது குண்டடம் காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை உடனடி நடவடிக்கை எடுப்பார்களா என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், தேர்தல் காலம் நெருங்கி வரும் சூழலில் இத்தகைய சட்ட மீறல்கள் நடைபெறுவதாக கூறப்படுவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக