காப்புக்காடு ஆக்கிரமிப்பால் 100 ஆண்டு பழமையான நடைபாதை முடக்கம்: வீட்டிற்குள் முடங்கிய குடும்பம் – நடவடிக்கை கோரி கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 மே, 2026

காப்புக்காடு ஆக்கிரமிப்பால் 100 ஆண்டு பழமையான நடைபாதை முடக்கம்: வீட்டிற்குள் முடங்கிய குடும்பம் – நடவடிக்கை கோரி கோரிக்கை.


கிருஷ்ணகிரி, மே.28:


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட சூலகுண்டா கிராமத்தில் காப்புக்காடு (RF) நில ஆக்கிரமிப்பால் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த நடைபாதை முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு குடும்பம் வீட்டிற்குள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தவித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.


சூலகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சி. சக்திவேல் என்பவர் தனது குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இவர்களது குடியிருப்பிற்குச் செல்லும் பாரம்பரிய நடைபாதை காப்புக்காடு நிலத்தின் வழியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த காப்புக்காடு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்ட நடைபாதை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது குறித்து மாவட்ட வன அலுவலர் (DFO) உத்தரவின் பேரில் வனத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். பாதை மறிக்கப்பட்டதால், அவசர மருத்துவ தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினர் வீட்டிற்குள் முடங்கிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நடைபாதை தொடர்பாக கேட்டதற்காக சக்திவேல் தாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் FIR எண் 103/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் உடனடியாக தலையிட்டு காப்புக்காடு நில ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுப் பயன்பாட்டு நடைபாதையை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad