உளுந்தூர்பேட்டை, ஆகஸ்ட் 25:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும் அருகிலுள்ள பகுதியில் தூக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (23) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த டாட்டா ஏசி வாகன ஓட்டுநர் கவிதாஸ் (27) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். தகவல் கிடைக்காததால், எடைக்கல் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பாலி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் கிருஷ்ணவேணியின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதே பகுதியில், கிணற்றில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வேப்பமரத்தில் கவிதாஸ் தூக்கில் சடலமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது மரணத்திற்கான காரணம் என்ன, திருமணம் தொடர்பான குடும்ப எதிர்ப்பு ஏதேனும் இருந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலி கிராமத்தில் ஒரே நாளில் இரு இளைஞர்களின் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக