கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் புஸ்ரா முன்னிலையில், கிழக்கு கந்தசாமிபுரம் 17-வது வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தனியாகவும், காய்கறி கழிவுகள், உணவுக் கழிவுகள், காகிதம் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை தனியாகவும் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் குப்பைகளை முறையாக கையாளவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தனியாக பிரித்தெடுக்கவும் முடியும். எனவே, பொதுமக்கள் நகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கும் பொதுமக்களுக்கு நகராட்சி விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி ரமேஷ்பாபு, நகராட்சி மேற்பார்வையாளர்கள் மகேஷ்ராஜா, சரவணன், ரகுநாதன், தலைமை ஆசிரியர் சூரியகுமார், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் திருமாவளவன் மற்றும் நகராட்சி களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக