உளுந்தூர்பேட்டை அருகே நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசம் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

உளுந்தூர்பேட்டை அருகே நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசம் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த பப்பாளி பழங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெருங்குறிக்கை, அத்திப்பாக்கம், நரிப்பாளையம், எறையூர், செம்மனங்கூர், வடகுரும்பூர், காட்டியடையார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு பப்பாளி மரங்களில் நல்ல விளைச்சல் கிடைத்ததுடன், பெரும்பாலான தோட்டங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இதனால் விவசாயிகள் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பெருங்குறிக்கை, அத்திப்பாக்கம், நரிப்பாளையம், எறையூர், காட்டியடையார் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன.

மரங்கள் முறிந்து விழுந்ததில் அவற்றில் இருந்த அறுவடைக்கு தயாராகியிருந்த பப்பாளி பழங்களும் தரையில் விழுந்து சேதமடைந்தன. இதனால் பல மாதங்களாக விவசாயிகள் மேற்கொண்டிருந்த உழைப்பு ஒரே இரவில் பெரும் இழப்பாக மாறியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக தெரிவித்தனர். உரம், மருந்து, தண்ணீர், தொழிலாளர் கூலி உள்ளிட்ட பல்வேறு செலவுகளை செய்து, பல மாதங்களாக பராமரித்து வந்த நிலையில், அறுவடை நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், அறுவடை மூலம் கிடைக்கும் வருவாயை நம்பி இருந்த நிலையில், தற்போது பப்பாளி மரங்கள் சேதமடைந்துள்ளதால் தங்களது வாழ்வாதாரமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மழையால் சேதமடைந்துள்ள பப்பாளி தோட்டங்களை வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு, சேத விவரங்களை முறையாக கணக்கெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் பேரிடர் நிவாரணம் மற்றும் வேளாண் பயிர் சேதத்திற்கான உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை குறைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad