கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 13-ம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றதுடன், பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 16-ம் தேதி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவ விழாவின் இறுதி நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுமார் 20 அடி உயர திருத்தேரில், குதிரை வாகனத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தேரின் வடத்தை பிடித்து, கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டபடி தேரை இழுத்தனர். பக்தர்களின் கோஷங்கள் விண்ணை அதிரச் செய்த நிலையில், முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு பாதூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருத்தேரோட்டம் மற்றும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து சுவாமியை வழிபட்ட நிலையில், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக