கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் குளத்தில், உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் தூய்மைப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோயில் குளத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர். மேலும், குளக்கரையைச் சுற்றிலும் வளர்ந்திருந்த முள் செடிகள் மற்றும் புதர்களும் அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குளக்கரையை பசுமையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்றத் தலைவர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி ரமேஷ்பாபு, நல்லாசிரியர் பாவாணன், ஜெயினுலாபுதீன், நகராட்சி ஆய்வாளர் கந்தசாமி, மேற்பார்வையாளர் ரகுராமன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பாண்டியன், ஆசிரியர் ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்தியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகளையும் நட்டனர்.
நீர் நிலைகளை பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, சுற்றுப்புறத் தூய்மையை பேணுவது மற்றும் மரங்களை வளர்ப்பது போன்ற சமூகப் பொறுப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக