கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் ஏரிக்கரை பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
களமருதூர் ஏரிக்கரை பகுதியில் இருந்து கொரட்டங்குறிச்சி செல்லும் சாலையில் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. விபத்தில் மேட்டுப்பாச்சபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர் விபத்துகளுக்கு காரணமாகும் மோசமான சாலை
களமருதூர் ஏரிக்கரையில் இருந்து கொரட்டங்குறிச்சி வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகவும், ஆங்காங்கே மேடு பள்ளங்களுடனும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இதனால் இச்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்கள் மற்றும் குறுகலான பகுதிகள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
களமருதூர் ஏரிக்கரை–கொரட்டங்குறிச்சி சாலையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, களமருதூர் ஏரிக்கரை சாலையை உடனடியாக அகலப்படுத்தி, தரமான முறையில் புதிய சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நீண்ட காலமாக சாலையை முறையாக சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வரும் நெடுஞ்சாலைத்துறையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
தொடரும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலதாமதம் செய்யாமல் களமருதூர் ஏரிக்கரை–கொரட்டங்குறிச்சி சாலையை ஆய்வு செய்து, உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக