தமிழக ஆசிரியர் கூட்டணியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் வட்டாரக் கிளை தேர்தல் தேதிகள் அறிவிப்பு ஆசிரியர் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தீர்மானம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 செப்டம்பர், 2026

தமிழக ஆசிரியர் கூட்டணியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் வட்டாரக் கிளை தேர்தல் தேதிகள் அறிவிப்பு ஆசிரியர் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தீர்மானம்.


தமிழக ஆசிரியர் கூட்டணியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் க. ஏழுமலை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஞான. சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ஏ. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ப. ஆழ்வார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளர் அருணா சூர்ய குமார் கூட்டப்பொருள் விளக்க உரையாற்றி, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், கூட்டணியின் உறுப்பினர் பட்டியல் தயாரித்தல், மாநில பங்குத் தொகை செலுத்துதல், வட்டார வரவு–செலவு பதிவேடுகளை முறையாக பராமரித்தல், ஆசிரியர் இயக்க குரல் அஞ்சல் புதிய சந்தா சேர்த்தல், இந்த ஆண்டு பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்தல், வட்டாரக் கிளை தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், தமிழக ஆசிரியர் கூட்டணியை வட்டார அளவில் மேலும் வலுப்படுத்துவது, வட்டாரக் கிளை தேர்தல்களை முறையாக நடத்துவதற்கான வழிமுறைகள் வகுப்பது, தனியாசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தின் முக்கிய முடிவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கிளைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி,

09.10.2026 – தியாகதுருகம் வட்டாரம்

10.10.2026 – காலை கள்ளக்குறிச்சி வட்டாரம்
மாலை: ரிஷிவந்தியம் வட்டாரம்

11.10.2026 – காலை: உளுந்தூர்பேட்டை வட்டாரம்
மாலை: திருநாவலூர் வட்டாரம்

என வட்டாரக் கிளை தேர்தல்களை நடத்துவது என செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்களின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்னெடுத்து செயல்படுவதுடன், கூட்டணியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை அனைத்து வட்டாரங்களிலும் மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் தொ. இராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad