கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி தனியார் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 190 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக விண்ணப்பங்களை அளித்தனர்.
முகாமில் கலந்து கொண்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வேலை தேடி வந்த இளைஞர்களின் கல்வித்தகுதி, தொழில்நுட்பத் திறன் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றனர். தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் கல்வி மற்றும் பிற சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு உரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தகுதி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் பணிகளும் நடைபெற்றன.
இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான பணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த முகாம் மூலம், வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த ஏராளமான படித்த இளைஞர்கள் ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களை அணுகி தங்களது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக