கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் “உயர்வுக்குப் படி 2026” என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவ, மாணவிகள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள், பல்வேறு துறைகளில் உள்ள கல்வி வாய்ப்புகள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் கலாநிதி கலந்து கொண்டார். ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கலைவாணி வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணி ராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணகுமார், அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது துறைகள் சார்ந்த கல்வி வாய்ப்புகள், மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்கள், உயர்கல்வி தொடர்பான வாய்ப்புகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் தங்களது ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ற உயர்கல்விப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது குறித்தும், எதிர்கால இலக்குகளை திட்டமிட்டு செயல்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தங்களது சந்தேகங்களை சிறப்பு அழைப்பாளர்களிடம் கேட்டறிந்து, உயர்கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பயனுள்ள தகவல்களை பெற்றனர்.
இந்த “உயர்வுக்குப் படி 2026” நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி தெரிவித்தார். மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
செல்வகுமார்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
தமிழக குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக