உழைப்பின் மேன்மையையும், கல்வி மற்றும் அறிவின் சிறப்பையும் போற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை திருநாட்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, மனநிறைவு, நம்பிக்கையை ஏற்படுத்தட்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அன்றாட வாழ்க்கையிலும், தொழில் மற்றும் பணிகளிலும் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களுக்கு மதிப்பளித்து, உழைப்பின் மாண்பைப் போற்றும் திருநாளாக ஆயுத பூஜை திகழ்கிறது. எந்தவொரு பணியிலும் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் செயல்பட்டால் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும்.
கல்வி, அறிவு, ஞானம், கலை மற்றும் படைப்பாற்றலின் சிறப்பைப் போற்றும் சரஸ்வதி பூஜை, தனிமனித முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் கல்வி அடித்தளமாக இருப்பதை உணர்த்துகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், இளைஞர்கள் அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொண்டு வாழ்வில் உயரவும் இத்திருநாள் ஊக்கமளிக்கிறது.
உழைப்பையும் அறிவையும் இரு கண்களாகக் கொண்டு அனைவரும் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். அன்னை சரஸ்வதியின் அருளால் அனைவருக்கும் நலமும், வளமும் கிடைக்கட்டும். உழைக்கும் கரங்களுக்கு வலிமையும், முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைக்கட்டும். அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக