புதுச்சேரி: சாகர்மாலா 2.0 திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுக மேம்பாட்டுக்கான நிலுவைப் பணிகளை நிறைவேற்றவும், புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம், புதுச்சேரி துறைமுகத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பையில் அக்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அவர், புதுச்சேரி துறைமுக மேம்பாட்டுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.
அதில், புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல், கடல் மற்றும் நீர்வழிப் பாதைகளைத் தூர்வாருதல், 6 மீட்டர் ஆழம் கொண்ட சரக்குக் கப்பல்களைக் கையாளும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
மேலும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் சொகுசுக் கப்பல் சுற்றுலா மற்றும் நீர்விளையாட்டுகளை மேம்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்க ரூ.100 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், புதுச்சேரிக்குத் தேவையான நிதி மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக