கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிடாகம் ஊராட்சியில் நடப்பு ஆண்டுக்கான கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா கலந்து கொண்டார். ஊராட்சி பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த ஒரு வருடமாக ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதி மற்றும் செலவிடப்பட்ட தொகை குறித்த வரவு-செலவு அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கினார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென எழுந்து, "நிறைய திட்டங்கள் சொல்கிறீர்கள், ஆனால் இந்த பகுதியில் இதுவரை எந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளீர்கள்?" என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவர், "இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லை, சுகாதாரம் இல்லை, குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இன்னும் கூரை வீடுகள் தான் அதிகமாக உள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களும் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் சற்று திணறினார். பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை அடுத்து கூட்டம் சுமூகமாக முடிந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி மாணவிகள், தங்கள் பள்ளியில் கழிவறைகள், விளையாட்டு திடல் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து மனுக்கள் அளித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக