உளுந்தூர்பேட்டையில் ஆங்காங்கே மர்மப் பொருட்கள் வைத்து மாந்திரீகம் செய்தது போன்ற செயல்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 நவம்பர், 2026

உளுந்தூர்பேட்டையில் ஆங்காங்கே மர்மப் பொருட்கள் வைத்து மாந்திரீகம் செய்தது போன்ற செயல்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் மாந்திரீகம் செய்தது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அருகே மர்மமான முறையில் தேங்காய் உடைக்கப்பட்டு, ஆவாரம்பூச் செடியில் தாலி கட்டப்பட்டு, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன், அப்பகுதியில் மர்மமான முறையில் இத்தகைய செயல்கள் நடைபெறுவது ஏன் என்ற அச்சமும் சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏற்கனவே உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் மற்றும் அன்னை சத்யா தெரு உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு மண்டை ஓடு உள்ளிட்ட பொருட்கள் மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோன்று திருவெண்ணெய்நல்லூர் சாலையில் அமைந்துள்ள பூங்கா பகுதியிலும் மாந்திரீகம் செய்தது போன்ற மர்மச் செயல்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது.

தற்போது நகரின் மற்றொரு முக்கியப் பகுதியான அண்ணா நகர் அறிவுசார் மையம் அருகிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும், குழந்தைகள் வந்து செல்லும் பொது இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் வைக்கப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இதுபோன்ற மர்மப் பொருட்கள் வைக்கப்படுவதால், அவற்றைப் பார்க்கும் குழந்தைகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் யார், எதற்காகப் பொது இடங்களில் இதுபோன்ற பொருட்களை வைத்துச் செல்கின்றனர், இதன் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளன.

எனவே, உளுந்தூர்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற மர்மச் செயல்கள் குறித்து நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். சம்பவம் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொது இடங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நகர மக்களின் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad