"ஆப்ரேஷன் கந்துவட்டி" தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜூன், 2022

"ஆப்ரேஷன் கந்துவட்டி" தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.


கந்துவட்டிக் கொடுமை தொடர்பான புகார்களை விசாரிக்க, காவல் துறையில் கந்துவட்டி தடுப்புப் பிரிவு என தனிப் பிரிவு உள்ளது. எனினும், கந்துவட்டி தொடர்பான குற்றங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.


இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) கந்துவட்டி தொடர்பான பிரச்சினையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேரிடாமல் தடுக்கும் வகையில், கந்துவட்டிக்கு எதிராக ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல் துறை டிஜிபிசி.சைலேந்திர பாபு, மேற்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோர், `அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003′-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டிப் புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.


கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களிடம் வசூலித்த வட்டித் தொகை எவ்வளவு என்பது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உரியசட்ட ஆலோசனை பெற்று, வழக்குபதிவு செய்ய வேண்டும்.


கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, அவர்கள் வைத்திருக்கும் கந்துவட்டி தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டும்.


கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பர்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால், அவைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.


கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை போலீஸார் திறம்பட மேற்கொள்ள வேண்டும்.

கந்துவட்டி தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்பாகவும், முன்மாதிரியாகவும் பணியாற்றுபவர்களுக்கு, அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும், இவ்வாறு அறிக்கையில் டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து, தமிழகம் முழுவதும் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என்றும், அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/