உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை; பணமதிப்பிழப்பு வழக்கை விசாரித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.! ஒன்றிய அரசு வழக்கறிஞரின் பதிலால் அதிர்ச்சி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 அக்டோபர், 2022

உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை; பணமதிப்பிழப்பு வழக்கை விசாரித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.! ஒன்றிய அரசு வழக்கறிஞரின் பதிலால் அதிர்ச்சி


உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வானது, பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வைத்த வாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். 

அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் வங்கிகள் மூலம் புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகினர்.

ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. 

மாறாக ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 57 ரிட் மனுக்கள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘இந்த வழக்கில் தனிநபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை நிர்வாக ரீதியில் சரி செய்யலாம்.

அதை விடுத்து இவ்வழக்கை அரசியல்சாசன அமர்வு விசாரித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என்றார். 

தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் திவான், ப.சிதம்பரம் ஆகியோர் வாதத்தில், ‘பணமதிப்பிழப்பு வழக்கில் ஒன்றிய அரசின் சிந்தனை அதிர்ச்சி அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வேதனையையும், பிரச்னையும் எதிர்கொண்டனர். 

இன்னமும் நாடு இப்பிரச்னையில் இருந்து மீளவில்லை. சட்டவிதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள் என்பதைவிட பொருத்தமற்ற கொள்கையாகவே உள்ளது’ என்றனர். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி அப்துல் நசீர், ‘இதற்கு முன் பணமதிப்பிழப்பு செய்த போது, எவ்வாறு பாதிப்புகள் இருந்தன?’ என்றார். தொடர்ந்து மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், ‘கடந்த காலங்களில் பணமதிப்பிழப்பு செய்தபோது இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை. 

ஒரே மாதிரியாக இருந்தது. ரூ.15.44 லட்சம் கோடி பணமதிபிழப்பு செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் ரூ.3 லட்சம் கோடி இன்னும் திரும்பவில்லை என்றும் கூறுகிறது. 

ரிசர்வ் வங்கி அதன் பொறுப்பை இழந்துள்ளது’ என்று வாதிட்டனர். இவ்வாறாக இன்று மாலை வரை விவாதங்கள் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/