உபியில் முன்னாள் எம்பி உட்பட இரண்டு பேர் மீது துப்பாக்கிச்சூடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஏப்ரல், 2023

உபியில் முன்னாள் எம்பி உட்பட இரண்டு பேர் மீது துப்பாக்கிச்சூடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


உத்திர பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி அதீக் அகமதும் அவரது சகோதரர் அஷ்ரபும் இந்துத்துவ சமூக விரோதிகளால் கொடூரமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் காவல்துறையினர் முன்னிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பார்ப்பதற்கே கோரமாகவும் கொடூரமாகவும் அக்காட்சிகள் அமைந்துள்ளன.


துப்பாக்கியால் சுட்டவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுகின்றனர். அதீக் அகமது குற்றப்பின்னணி உள்ளவர் என்றும் அவர் மீது பல வழக்குகள் உள்ளது என்று கூறப்பட்டாலும் இத்தகைய படுகொலையை ஏற்க முடியாது. அவர்கள் தவறு செய்திருப்பின் சட்டப்படி தண்டிக்கப்படுவதுதான் சரியான நடைமுறையாகும்.

அதற்கு பதிலாய் ஈவு இரக்கமின்றி இந்துத்துவ சமூக விரோதிகள் சுட்டுக் கொல்வதை ஏற்க முடியாது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் ஆகிவிட்டால் பிறகு சட்டம், காவல்துறை, நீதிமன்றங்கள் இவைகளெல்லாம் எதற்கு?


பாஜகவின் யோகி ஆட்சி புரியும் உத்திரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சமூக விரோதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்கு துப்பாக்கிக் கலாச்சாரம் உபியில் பெருகிவருகின்றது. அவர்களின் கரங்களுக்கு துப்பாக்கிகள் எப்படி வந்தன.


பொது வெளியில் காவல்துறை மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே இத்தகைய வன்முறை வெறியாட்டம் அரங்கேற்றப்படுகிறது என்றால் உபியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.


இத்தகைய காரியங்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் நாட்டில் வன்முறைத் தீயைப் பற்ற வைத்து அதன் கதகதப்பில் குளிர்காய நினைக்கும் சமூக விரோதிகளையும் அவர்களை ஊக்குவிக்கும் தீய சக்திகளையும் நீதிமன்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக் கொள்கிறோம், என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/